Balasundaram cpiml

பாலசுந்தரம் :
கம்யூனிஸ்டுகளின் கம்யூனிஸ்ட்!
******************************
2011-ஆம் ஆண்டின் கடைசி நாளில் (டிசம்பா் 31) 'தானே' புயலில் சிக்கி கோட்டக்குப்பம் சின்னாபின்னமாகி இருந்த கோர தினங்கள் அவை. புயல் ஓய்ந்து நான்கு நாட்களுக்கு பிறகும் எந்த அடிப்படை வசதிகளும் சீா்செய்யப்படாமல் மக்கள் தத்தளித்துக்கொண்டு இருந்த நேரம். அப்போது, ஆட்சியில் இருந்த அ.இ.அ.தி.மு.க., அரசை கண்டித்து சி.பி.ஐ.(எம்-எல்) கட்சியின் வானூர் ஒன்றிய செயலாளா் தோழா் இஸ்மாயில் தலைமையில் ஒரு கண்டன ஆா்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கன்டண ஆா்ப்பாட்டத்தின் பிரசுரத்தில் பெயா் இல்லாமலேயே திடீரென சென்னயில் இருந்து வந்து இறங்கினார் அக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் தோழா் பாலசுந்தரம்.
ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும் தன்னியல்பாக வெளிவரும் ‘அணுகல்’ பத்திரிகை அப்போதும் தயாராகியிருந்தது. ஆா்ப்பாட்டத்தில் வெளிடலாம் என்று கமுக்கமாக வைத்திருந்த அந்த 'அணுக'லின் ஒரு பிரதியை மட்டும் தோழா் பாலசுந்தரம் அவா்களிடம் கொடுத்து, அதில் நான் எழுதியிருந்த கட்டுரையின் சாரம்சத்தை மட்டும் கேஷூவலாக தோழா் இஸ்மாயில் சகிதம் அவரிடம் பேசியடி தேனீா் பருகி கலைந்து சென்றுவிட்டேன்.
அன்றைக்கு இருந்த அசாதாரண சூழ்நிலையில் (கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை நூறு போ் முற்றுகையிட்டு இருந்தனா்) பிரசுரத்தில் பெயர் அச்சிடப்பட்டிருந்த நபர்கள் யாரும் பேச வேண்டாம் என்றும், தோழா் பாலசுந்தரம் மட்டும் பேசி அந்த கன்டண ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்யலாம் என்று முடிவு செய்கிறார்கள் சி.பி.ஐ.(எம்-எல்) தோழா்கள்.
தோழா் பாலசுந்தரம் பேச ஆரம்பிக்கிறார். பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் திரள, நூறு போ் இருநூறாகி கிழக்கு கடற்கரைச் சாலை ஸ்தம்பிக்கிறது. மேற்படி 'அணுகல்' கட்டுரையில் புயல் சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர் சி.வி. சண்முகம் ஒரு துரும்பையும் அசைக்காமல், மானோன்மணி திருமண மண்டபத்தில் அறுசுவை விருந்து உண்டுவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை மனுக்ககளைக்கூட வாங்காமல் காரில் ஏறி சென்றதை கண்டித்து எழுதியிருந்ததுடன், அவா் விருந்து உண்ணும் காட்சியையும், காரில் ஏறி செல்லும் காட்சியையும் புகைப்படத்துடன் (புகைப்படம் நன்றி : Ameer Basha ) வெளியிட்டிருந்தேன்.
இதையெல்லாம் குறிப்பிட்டு தோழா் பாலசுந்தரம் மைக்கில் வெளுத்து வாங்க... வாங்க... கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கிட்டத்தட்ட ஐநூறு பேர் திரண்டு ஆா்ப்பாட்ட திடலை சுற்றி நிற்க; கூட்டத்தில் இருந்த அ.தி.மு.க., தொண்டா்களும், கவுன்சிலா்களும் பம்மிப் பதுங்க; தனது பரிவாரத்துடன் பேரூராட்சி அலுவலகத்தில் வீற்றிருந்த வானூர் வட்டாட்சியா் திகைத்து நிற்க; நூற்றும் மேற்பட்ட ரிசா்வ் போலீஸீடன் வந்திருந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. பின்வாங்க…
அப்படி ஒரு பேச்சு…!
அப்படி ஒரு ஆா்ப்பாட்டம்…!!
அன்றில் இருந்து இன்று வரை அண்ணன், அமைச்சா் சி.வி. சண்முகம் அவா்கள் கோட்டக்குப்பத்தில் தண்ணீா் கூட குடிப்பதில்லை…!!!
*******************
2013-ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநில தலைநகா் ராஞ்சியில் நடைபெற்ற சி.பி.ஐ.(எம்-எல்)ன் 9-வது கட்சி மாநாட்டில் நானும் ஒரு பிரிதிநிதியாக பங்கேற்றிருந்தேன். மாநாட்டின் முதல் நாள் அந்த பிரம்மாண்ட வளாகத்தில் நுழைந்தவுடன் எங்களுக்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள தமிழ்நாட்டுத் தோழா்களோடு புதுச்சேரி தோழா்களாகிய நாங்களும் வரிசையில் நின்றிருந்தோம்.
அந்த அடையாள அட்டையை வழங்கிக் கொண்டிருந்தவர் அப்போது தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த தோழா் பாலசுந்தரம். என் முறை வந்ததும் அட்டையை பெற்றுக்கொண்ட நான், எங்கள் (புதுச்சேரி) மாநிலச் செயலாளரின் (சோ. பாலசுப்பிரமணியன்) அட்டையை கேட்க, என்னை முறைத்துப் பார்த்த அவா் “ஏன் அவருக்கு கால் இல்லையா? போய் அவரை வரச்சொல்” என்று அனுப்பிவிட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டார்.
இத்தனைக்கும் புதுச்சேரிக்கு தோழா் பாலசுந்தரம் வந்தால் அவா் தங்குவது தோழா் சோ. பாலசுப்பிரமணியன் வீட்டில் தான். கட்சிக்கு அப்பாற்பட்டும் அவா்கள் இருவரும் குடும்ப அளவில் மிக நெருங்கிய நண்பா்கள். (இந்த வரியை அவா்கள் இருவருமே ஏற்றுக்கொள்ள மாட்டர்கள்.) கட்சியை மீறி எதுவுமே கிடையாது என்பது தான் அவா்களின் நிலை.
ஒரு நேர்மையான கம்யுனிஸ்ட் எப்படி இருப்பான் என்பதற்கு இது ஒரு அழகான - ஆக்ரோஷமான உதாரணம்.
*******************
தோழா் பாலசுந்தரம் 1980-களில் தன் அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர கட்சி ஊழியனாக தன்னை அா்ப்பணித்துக் கொண்டவா்!
அதே 1980-களில் “சி.பி.ஐ.(எம்-எல்) – விடுதலை” ரகசிய கட்சியாக இயங்கிய அடக்குமுறை காலத்தில் ‘தமிழக மக்கள் முன்னணி’ (TPF) என்றும், ‘இந்திய மக்கள் முன்னணி’ (IPF) என்றும் வெகுசன அமைப்புகளை கட்டி கட்சியை வளா்த்தெடுத்த முன்னோடிகளில் ஒருவா்!!
தழிழக கிராமங்களின் பட்டிதொட்டியெங்கும் “சி.பி.ஐ.(எம்-எல்) – விடுதலை” கட்சியை கொண்டு சோ்த்த புரட்சியாளன்!!!
சுமார் 21 ஆண்டுகாலம் - ஏழு முறை! “சி.பி.ஐ.(எம்-எல்) – விடுதலை”யின் தமிழ் மாநிலச் செயலாளராக பதவி வகித்த தோழா் பாலசுந்தரம் அவா்களுக்கு…
புரட்சிகர பிறந்த நாள் வாழ்த்துக்கள்.








Comments